search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள் வாக்குமூலம்"

    ரெயிலில் துளை போட்டு கொள்ளையடித்த ரூ.5.78 கோடி பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery
    சென்னை:

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 8-ந் தேதி இரவு புறப்பட்ட ரெயிலில் இருந்த சரக்கு பெட்டியில் ரூ.342 கோடி கிழிந்த ரூபாய் நோட்டுகள் கொண்டு வரப்பட்டது.



    இந்த ரெயிலின் மேற்கூரையில் கொள்ளையர்கள் துளையிட்டு மரப்பெட்டியில் இருந்த ரூ.5.78 கோடி பணத்தை கொள்ளையடித்து சென்றனர். சேலம்-விருத்தாச்சலம் இடையே இந்த கொள்ளை நடந்தது தெரிய வந்தது.

    இஸ்ரோ உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விசாரணையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர்சிங் தலைமையிலான கும்பல் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.

    இதையடுத்து சென்னையில் பதுங்கி இருந்த மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தினேஷ், ரோகன் பார்தி ஆகிய 2 பேரை கடந்த மாதம் 12-ந்தேதி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த மோஹர் சிங், அவனது கூட்டாளி கள் ருசிபார்தி, கிருஷ்ணா, மகேஷ்பார்தி, பிராஜ்மோகன் ஆகிய 5 பேரை தமிழக சி.பி.சி.ஐ.டி, போலீசார் கடந்த 5-ந் தேதி கைது செய்தனர்.

    கைதான 5 பேரையும் சென்னை சைதாப்பேட்டை 11-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். அவர்களிடம் விசாரணை நடத்த 15 நாள் போலீஸ் காவல் கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனுதாக்கல் செய்தனர்.

    5 பேரையும் 14 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையர்களிடம் போலீசார் நேற்று நடத்திய விசாரணையின் போது கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னரே பங்கு பிரித்து செலவு செய்துவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    ஆனால் கொள்ளை சம்பவம் நடந்த 3 மாதத்தில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் முழு பணத்தையும் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை என்று கருதி அவர்களிடம் போலீசார் மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொள்ளையடித்த பணத்தை தங்கமாக மாற்றி பதுக்கி வைத்திருக்கலாம் என்ற கோணத்திலும், சொத்துக்கள் வாங்கினார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே இந்த கொள்ளை சம்பவம் சேலம்-விருத்தாசலம் இடையே நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட கொள்ளையர்களை அந்த ரெயில் நிலையங்களுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று அதிகாலை 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னையில் இருந்து விருத்தாசலம் ரெயில் நிலையத்துக்கு கொள்ளையர்களை ஒரு வேனில் போலீசார் அழைத்து வந்தனர்.

    பின்னர் கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? எந்த இடத்தில் நடத்தப்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளை சம்பவம் குறித்து விருத்தாசலம் ரெயில் நிலைய 1-வது நடைமேடையில் வைத்து கொள்ளையர்கள் நடித்து காட்டினர். அப்போது அவர்கள் பல்வேறு தகவல்களையும் கூறினர்.

    பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னசேலம் ரெயில் நிலையத்துக்கு கொள்ளையர்களை அழைத்து சென்றனர். அங்கு விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் அனைவரும் சேலம் ரெயில் நிலையத்துக்கு விசாரணை நடத்த புறப்பட்டனர். #SalemTrainRobbery #TrainRobbery
    ×